கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 3 January 2015

இஷ்ராக், லுஹா தொழுகைகள்

இஷ்ராக், லுஹா தொழுகைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் விளக்கினால்
வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தெளிவு:-



கடமையான தொழுகைகளின் நேரங்கள் குறித்தும், கடமையான தொழுகைக்கு முன்னரும்
பின்னரும் தொழவேண்டியசுன்னத்தான தொழுகைகள் பற்றியும் முந்தைய பதிவுகளில்
கண்டோம். இஷ்ராக், லுஹாத் தொழுகைகள் விபரங்களை இப்பதிவில் காண்போம்!

இஷ்ராக் தொழுகை

சூரியன் உதிக்கும் நேரம், இஷ்ராக் என்று கூறப்படும். இஷ்ராக் தொழுகை
என்று ஒரு தொழுகை ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் நாமறிந்து இல்லை.
"ஸுபுஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு, அல்லாஹ்வை நினைவு
கூர்ந்தவராக அமர்ந்து, சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்க்கள் தொழுதால்
ஒரு ஹஜ்ஜும் ஒரு உம்ராவும் செய்த கூலி கிடைக்கும்" என்ற கருத்தில்
பலவீனமான சில அறிவிப்புகள் உள்ளன.

யாரேனும் ஜமாத்துடன் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுதுவிட்டு, சூரியன்
உதயமாகும்வரை அல்லாஹ்வை நினைவு கூர்பவராக அமர்ந்து, பின்னர் இரண்டு
ரக்அத்கள் தொழுதால் ஒரு ஹஜ், ஒரு உம்ராச் செய்தது போன்ற கூலி அவருக்கு
உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதோடு, ''முழுமையாக, முழுமையாக,
முழுமையாக'' (ஹஜ், உம்ராவின் கூலியைப் போன்று) கிடைக்கும் என்றும்
கூறினார்கள். - அறிவிப்பாளர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - திர்மிதீ
535).

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபூ ளிலால் என்பவர்
பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே, இது பலவீனமான
அறிவிப்பாகும்.

இதேக் கருத்திலும், "ஃபஜ்ருத் தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும்வரை தொழுத
இடத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்" என்றும் மேலும் சில அறிவிப்புகள்
தப்ரானி நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றிலும் பலவீனமான
அறிவிப்பாளர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்களே இடம்பெற்றுள்ளனர்.
சுன்னத்தான தொழுகை என்று கருதப்படும் இஷ்ராக் தொழுகைக்குச் சான்றாக
ஸஹீஹான அறிவிப்புகள் இல்லை!

சுபுஹுத் தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை தொழுத இடத்திலேயே அமர்வது,

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் அவைகளில் அமர்ந்திருந்தது உண்டா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் "ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) சூரியன் உதயமாகாதவரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து)
எழமாட்டார்கள். சூரியன் உதயமானபின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது
மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
(இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைப்பார்கள்" என்று
கூறினார்கள். - அறிவிப்பாளர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக்
பின் ஹர்ப் (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 1188, 1189, 4641, திர்மிதீ, நஸயீ,
அபூதாவூத், அஹ்மத்).

சுபுஹுத் தொழுகைக்குப் பின் சூரியன் உதயம்வரை நபி (ஸல்) அவர்கள்
பள்ளியில் அமர்ந்திருப்பார்கள். அந்நேரத்தில் மக்கள் அறியாமைக் கால
முந்தைய செய்திகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டு
நபி (ஸல்) அவர்களும் புன்னகைப்பார்கள் என்று ஸஹீஹான அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது.

"... இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் உம்ராவும், ஹஜ்ஜும் செய்த நன்மை
கிடைக்கும்" என்பது பற்றிய எந்தக் குறிப்பும் மேற்கண்ட ஆதாரப்பூர்வமான
ஹதீஸில் இல்லை.

தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் அமர்ந்திருப்பதன் சிறப்பு.

ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போதெல்லாம் அவர்
தொழுகையிலேயே இருப்பவராவார்.உங்களுள் ஒருவர் பள்ளியில் இருக்கும்போது
ஹதஸ் ஏற்படாதவரையில் (உளூ நீங்காதவரையில்) இறைவா! இவரை மன்னித்துவிடு!
இறைவா! இவருக்கு அருள் புரிவாயாக! என்று வானவர்கள் அவருக்காக
பிராத்தித்துக் கொண்டே இருக்கின்றனர். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
(நூல்கள் - திர்மீதி 302, இப்னுமாஜா, அஹ்மத்).

"ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்றிவிட்டு அடுத்த நேரத் தொழுகையை
எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் அதற்கும் தொழுகையில் இருப்பது போன்ற
நன்மை கிடைக்கும்" என நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. கடமையானத்
தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்றியபின் உளூ நீங்கும்வரை பள்ளியிலேயே
ஒருவர் அமர்ந்திருந்தாலும் அவருக்கு வானவர்களின் பிரார்த்தனை நன்மையும்
கிட்டும். என்பதால் பொதுவாக பள்ளியில் அமர்ந்திருப்பது நன்மையாகும் என்று
விளங்கலாம்!

லுஹாத் தொழுகை

லுஹா - முற்பகல் நேரத்தில் தொழும் சுன்னத்தான தொழுகையைக் குறித்து
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளன.
உங்களுள் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தம்) ஒவ்வொரு (உடலுறுப்பின்)
மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு
(சுப்ஹானல்லாஹ்) துதிச் சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு(அல்ஹம்து லில்லாஹ்)
புகழ்ச் சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு (லா இலாஹ இல்லல்லாஹ்) ஓரிறை
உறுதிமொழியும் தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹு
அக்பர்) சொல்லும் தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும்
தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) இரண்டு ரக்அத்கள் (ளுஹா) தொழுவது
போதுமானதாக அமையும். - அறிவிப்பவர் அபூதர் (ரலி) (நூல்கள் - முஸ்லிம்
1181, அபூதாவூத்).

"ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் 'ளுஹா' நேரத்தில்
இரண்டு ரக்அத்கள் தொழுமாறும் உறங்குவதற்குமுன் வித்ருத் தொழுகையைத்
தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர் (ஸல்) அவர்கள் எனக்கு
அறிவுறுத்தினார்கள்!" அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி
1178, 1981, முஸ்லிம் 1303, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், தாரமீ).

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது, ளுஹாத் தொழுவது,
வித்ருத் தொழாமல் உறங்கலாது, ஆகிய மூன்று விஷயங்களை நான் வாழ்நாளில்
ஒருபோதும் கைவிடக் கூடாது என என் நேசர் (நபி- ஸல்) அவர்கள்
அறிவுறித்தினார்கள். அறிவிப்பாளர் அபூதர்தா (ரலி) (நூல்கள் - முஸ்லிம்
1304, அபூதாவூத், அஹ்மத்).

நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுதாக உம்முஹானி(ரலி)யைத் தவிர வேறு எவரும்
அறிவிக்கவில்லை 'நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு மக்கா
வெற்றியின்போது வந்து குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் அவர்கள் தொழ நான்
பார்த்ததில்லை. ஆயினும் அவர்கள் ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாகச்
செய்தார்கள்' என்று உம்முஹானி(ரலி) அறிவித்தார். அறிவிப்பவர்
அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) (நூல்கள் - புகாரி 1176, 4292,
முஸ்லிம் 1298, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா
மாலிக், தாரமீ).

லுஹாத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களிலிருந்து எட்டு ரக்அத்துக்கள்வரை
தொழலாம் என்ற விபரத்தை முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்து
அறியலாம். நன்கு சூரியன் உதித்தபின் முற்பகல் நேரத்தில் தொழவேண்டிய
சுன்னத்தான லுஹாத் தொழுகையை இரண்டு, நான்கு, ஆறு, எட்டு ரக்அத்துக்கள்வரை
விரும்பியவாறு தொழுதுகொள்ளலாம்.

இஸ்திகாரா தொழுகை

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத்
தந்ததுபோல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும்
கற்றுத் தந்தார்கள், ''உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால்
கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் 'இறைவா! உனக்கு
ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன்; உனக்கு வல்லமை
இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன்; உன்னுடைய மகத்தான அருளை
உன்னிடம் வேண்டுகிறேன்! நீ அனைத்திற்கும் ஆற்றலுள்ளவன்; நான் ஆற்றல்
உள்ளவன் அல்லன். நீ அனைத்தையும் அறிகிறாய்; நான் அறிய மாட்டேன்.
மறைவானவற்றையும் நீ அறிபவன்!

இறைவா! எனது இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய
வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதை
எளிதாக்கி, அதில் எனக்கு பரக்கத் செய்வாயாக! இந்தக் காரியம் என்னுடைய
மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால்
என்னைவிட்டு இந்தக் காரியத்தையும், இந்தக் காரியத்தைவிட்டு என்னையும்
திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! அதில்
எனக்குத் திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக்
குறிப்பிடட்டும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - புகாரி 1162, திர்மிதீ, நஸயீ,
இப்னுமாஜா, அபூதாவூத், அஹ்மத்).

எந்த ஒரு விஷயத்திலும் ஒரு நிலையான முடிவுக்கு வருவதில் தடுமாற்றம்
ஏற்பட்டு, அந்தக் காரியத்தைச் செயல்படுத்திட மனக் குழப்பம் ஏற்படுமானால்
நல்லதை நாடி இரண்டு ரக்அத்துக்களைத் தொழுதுவிட்டு அதன் பின்னர் தமது
சொந்தப் பிரச்சினையைப் பற்றிய கோரிக்கையை அல்லாஹ்விடம் முறையிட்டு அதில்
ஒரு முடிவைத் தீர்மானிக்கவும் மேலும். தமது மேலதிகமானத் தேவையின்
கோரிக்கையை அல்லாஹ்விடம் முறையிடவும் மேற்கண்ட ஹதீஸ் வழிகாட்டுகின்றது.

கடமையான மற்றும் சுன்னத்தானத் தொழுகைகளையும் நிறைவேற்றி, நஃபில் என்னும்
விருப்பமான தொழுகைகளையும் சலிப்பின்றி - சில குறிப்பிட்ட நேரங்கள்
தவிர்த்து - எந்நேரமும் தொழுது அல்லாஹ்வை வழிபடலாம். இன்னின்ன சுன்னத்தான
தொழுகைக்கு இன்னின்ன நன்மைகள் உண்டு எனக் குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டுமெனில் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளக்கம்
பெறவேண்டும்! ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கு மட்டுமே மார்க்க அங்கீகாரம்
உண்டு என்பதை விளங்கிச் செயல்படுவோம்.
நன்றி ..islamsahana .blogspot .com 
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக 

No comments:

Post a Comment