இப்படியும் செய்யலாம்/உதவலாம்.

உயர்ந்த மாடிக்கட்டிடம். சுட்டெரிக்கும் வெயிலில், கயிற்றில் தொங்கும் இயந்திரத்தில் நின்று கொண்டு 2 பேர் வெளியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக் கண்ணாடிகளையும் துடைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் நாளாந்த கடினமான வேலை. அந்த வேலை முடியும் வரை பாத்ரூம் கூட செல்ல முடியாது

இவ்வாறு துடைத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ஜன்னல் திறக்கிறது. ஒரு சிறுமி கையில் பாத்திரம் நிறைய குளிர்பானத்தோடு, அங்கிள் ரொம்ப டயர்டா இருப்பீங்க அம்மா தந்தாங்க குடிங்க.. என்று நீட்ட. அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருவர் கண்களும் குளம் ஆகியது. கொடுக்கும் காசுக்கு ஒழுங்கா வேலை செய்யு என்று திமிரான குரல்களையே கேட்ட அவர்களுக்கு, எதிர்பாராமல் கிடைத்த இந்த கவனிப்பும் அன்பும் 1000 கோடிக்கு சமம். ஆயிரக் கணக்கில் செலவு செய்து கொடுக்கும் விருந்தில் கிடைக்கும் திருப்தியை விட, இந்த உள்ளங்கள் அந்த கணம் கேட்கும் துஆக்கள் நமது பல கஷ்டங்களை தவிடு பொடியாக்கிவிடும்


ஒரு முறை, ரேடியோவில் ஒருவர், தான் வாரத்தில் மூன்று நாளாவது காரில் (சுமார் 200 KM+ )வெளியூர் சென்று வருவது வழக்கம். காலையில் போய் மாலையில் வருவேன் இவ்வாறு செல்லும்போது தன மனைவி குளிர்பானங்கள் அல்லது சூடாக காபி, டீ போட்டு பிளாஸ்கில் தருவாள். ஒரு 10-15 பேர் வரை குடிக்கலாம். சில நேரம் கொறிப்பதற்கும் ஏதும் தருவாள். போகும் வழியில் ரோடு வேலை பார்பவர்கள் அல்லது Construction வேலை பார்பவர்களை காணும்போது இவற்றை கொண்டு போய் கொடுப்பேன். கடை சாப்பாட்டில் நாக்கு செத்து கிடக்கும் அவர்களுக்கு இந்த காபி டீயில் கிடைக்கும் சந்தோசமே தனி என்றார். மேலும் இதை சுமார் 10 வருடங்களாக செய்வதாகவும் சொன்னார்.

குளிர்வது அவர்கள் உள்ளங்கள் மட்டுமல்ல நம் உள்ளமும்தான். அது மட்டுமா, அந்த முழுப் பயணத்திலும் எதோ ஒரு பாதுகாப்பில் உள்ளதாக ஓர் உணர்வு. குடும்பத்தவர்களும் வீட்டிலிருந்தே பெரிய நன்மையை கொள்ளை அடித்து விடுகிறார்கள். இப்படி, ஒரு சிறு முதலீடு இம்மையிலும், நாளை மறுமையிலும் பல நமைக்ளை கொண்டு வரலாம். இன்ஷா அல்லாஹ்.

 இது இப்படி இருக்க நன்றாக சம்பாதிக்கும் இன்னும் சிலர், தினமும் தனது தனிப்பட்ட செலவை குறைப்பதற்காக, பள்ளிகளில் மக்களுக்காக வைத்திருக்கும் குடி நீரை பிடித்து வந்து ரூமில் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இலவசமாக பள்ளிகளில் வைக்கப்படும் Drinks போன்றவற்றை தேவைக்குபோக பாக்கெட்டிலும் அள்ளி வருகிறார்கள்

நாம் அல்லாஹ்விடம், நம் கைகளை எடுக்கும் கைகளை விட கொடுக்கும் கைகளாக ஆக்க துஆ செய்ய வேண்டும். நாமும் அதிகம் கொடுப்பவர்களாக மாற வேண்டும். வெயில் காலங்களில் தண்ணீர் போன்றவற்றை வாங்கி இலவசமாக கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். இது நம் செல்வத்தை ஒரு போதும் குறைக்காது

இப்படிதான் ஒரு முறை ஒரு சிறுவன் காரில் வந்து இறங்கி தனது ஏழை நண்பனை பார்த்து இது எனது அண்ணன் பரிசளித்த கார் என்று கூறிவிட்டு, உனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லை என்று கவலை படுகிறாயா என்று கேட்டானாம். உடனே ஏழை சிறுவன், இல்லை இல்லை, நான் அது போல ஒரு அண்ணனாக வளர்ந்து என் தம்பிக்கு காரை அன்பளிப்பு செய்ய ஆசைப் படுகிறேன் என்றானாம்.
 நாமும் தூய எண்ணத்தோடு அதிகம் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2 : 261)

 அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ், தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது போல், சிறு சிறு உதவிகள் மூலமும், பெரிய உதவிகள் செய்வதன் மூலமும் அல்லாஹ் நம் வாழ்வை மன நிம்மதி தரக் கூடிய வாழ்வாக ஆக்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்
அபூ அம்மாராஹ்
இப்படியும் செய்யலாம்/உதவலாம்.

Comments