அழகிய சொல்லாடல்

எனதருமைச் சிறார்களே, பள்ளிப் படிப்புகளுக்கும், விளையாட்டுச் சுட்டித்தனத்திற்கும் பஞ்சமில்லாமல் சிட்டாய் பறந்தோடும் இந்த வேளையில் உங்களால்
மொழியப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலும் நம்மைப் பற்றிய முழு அபிப்ராயங்களையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்வது நமது நாவு தான். நம்மோடு சிலர் நெருங்கிப் பழகுவதற்கும் விரண்டோடுவதற்கும் அடிப்படையான விஷயம் நமது பேச்சு தான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

நம்மில் சிலர் தம் நண்பர்களோடு சேர்ந்துவிட்டாலே போதும், வீதிகளில் செல்பவர்களை வயது வித்தியாசமின்றி கேலி, கிண்டல் என கலாச்சு தள்ளிடுவோம். பிறரிடமிருந்து ஏதேனும் குறை தென்பட்டாலே போதும் அதை மையமாக வைத்து அவர்களை நேருக்கு நேராக அல்லது அவர்கள் போன பிறகு நக்கலாக அவர்களைப் போன்றே பாவனைகள் செய்து கடுமையாக விமர்சனம் செய்கிறோம். நம்மை சூழ்ந்து நிற்கும் நண்பர்களின் சிரிப்பு சப்தங்களையே, நமக்கு பெரிய கெளரமாக, பாராட்டுக்களாக கருதுகிறோம்., ஆஹா.., அதில் என்ன ஒரு ஆனந்தம்.
நமது இத்தகைய இங்கிதமற்ற செயல்பாடுகள் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அந்த சமயத்தில் நகைச்சுவை விருந்தாக இருந்த போதிலும் நாளடைவில் நம்மைப் பற்றிய தவறான பிம்பத்தையே நம் நட்பு வட்டாரங்களில் உண்டாக்கும். இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் அழகிய உபதேசங்களைப் பாருங்கள்.,
பரிகாசம் செய்யாதீர்கள், குத்திப் பேசாதீர்கள், பட்டப்பெயர்களைக் கொண்டு அழைக்காதீர்கள்.
திருக்குர்ஆன் 49:11
பிறர் மனம் புண்படும்படி நமது பேச்சு அறவே இருத்தல் கூடாது. பிறரிடம் உள்ள குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து அதனை வைத்து அவர்களை கேலி, கிண்டல் செய்யக் கூடாது, இன்னும் பிறர் ஏதேனும் தவறிழைத்து விட்டால் அதனை ஆயுள் முழுக்க குத்திக்காட்டி பேசுவதும் கூடாது. பிறரது குறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு பட்டப்பெயர்களைச் சூட்டி அழைப்பதும் கூடாது.
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் அறிவிக்கின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
[நூற்கள்: புகாரி, முஸ்லிம்].
இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினால் இறைவன் மன்னிக்க வாய்ப்புண்டு. ஆனால், சக மனிதர்களுக்கிடையே நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாவிடினும் அல்லது மனித உரிமைகளை மீறினாலும் சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிப்பதில்லை.
எனதருமைச் சிறார்களே, நமது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் பிறரை மனதளவில் கூட காயப்படுத்தி விடக் கூடாது. நாளைய தீர்ப்பு நாளில் இறைவனின் கருணையுடன் கூடிய மன்னிப்பை விரும்பக்கூடிய எவரும் இனி பிறர் மனம் நோகும்படி பேச மாட்டார்.
வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!
         இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லவர்களின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போமாக! 
-  இளமதி அப்துல் வஹ்ஹாப்.
நன்றி  .. சமூகநீதி 
அல்லாஹ் அவர்களுக்கு  நற்கிருபைச் செய்வானாக! 
அழகிய  சொல்லாடல் /ஒரு அருமையான தலைப்பு  

Comments