நெகிழ்வூட்டும்அறிவுரைகள்


6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.

6413. அனஸ்(ரலி) அறிவித்தார்.  (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!“ என்று (பாடியபடி) சொன்னார்கள். 3
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.


6415. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.  “சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்“7 என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.

6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு“ என்றார்கள்.  (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)  “நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு“ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.

6417. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.  (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:  (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் “சூழ்ந்துள்ள“ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட“ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும். 11
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் :81.
6419. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81
6420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.  1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.  2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.
6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:  1. பொருளாசை.  2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.  என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. Allah knows better.

Comments