கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Tuesday 27 January 2015

உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.

5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53.

5664. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ”ஆலியா”வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, ”உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச்  செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அப்துல் வஹ்ஹாப் அஸ் ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”இந்த ஆடு உயிருடனிருந்தால்கூட அதன் காதுகள் சிறுத்திருப்பதன் காரணமாகக் குறையுள்ளதாகவே இருக்கும்” என்று மக்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53.

5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ”மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ”ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ”நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.

5666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியான், ”என் செல்வம்; என் செல்வம்” என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.

5667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்: இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.
5668. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, ”ஜிஸ்யா” (காப்பு)வரி வசூலித்துக் கொண்டுவரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, ”அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார்  என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள். அதற்கு அன்சாரிகள், ”ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். ”அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, ”அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச்செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (”அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அழித்துவிடுமோ” என்பதற்குப் பகரமாக) ”அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் திருப்பி விடுமோ” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.
5669. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பாரசீகர்களும் ரோமர்களும் உங்களால் வெற்றி கொள்ளப்படும்போது, நீங்கள் எத்தகைய மக்களாய் இருப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ”அல்லாஹ் எங்களுக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ (அதன்படியே நடந்துகொள்வோம்) அதன்படியே கூறுவோம் (அதாவது நன்றி கூறி அவனைப் போற்றுவோம்)” என்று விடையளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”வேறொன்றும் செய்யமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். பின்னர் ”நீங்கள் ஒருவருக்கொருவர் (சுயநலத்துடன்) போட்டி போட்டுக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் குரோதம் கொள்வீர்கள். அல்லது இவற்றைப் போன்றதைச் செய்வீர்கள்” என்று கூறிவிட்டு, ”பிறகு ஏழை முஹாஜிர்களை நோக்கிச் சென்று, அவர்களில் சிலருக்குச் சிலர்மீது அதிகாரத்தை வழங்குவீர்கள்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.
5670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.
5671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”உங்களுக்கு அல்லாஹ் புரிந்திருக்கும்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.

No comments:

Post a Comment