ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம்

 


ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.

 

அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.

 

ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.

 

முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.

 

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….

 

அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!

 

எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.

 

அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.

 

பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.

 

பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்.

 

அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.

 

அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால்,

 

அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?

 

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.

 

கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை

 

உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.

Comments