அழகிய பெண்
ஒருநாள் ஒரு அரசர் காட்டு வழியே குதிரையில் போய்க் கொண்டிருந்தார். காட்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார். அவளது அழகில் மயங்கிய அவர், அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அந்தப் பெண், தனது மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதால், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
ஆனால், அரசருக்கு அவளை விட்டு விட மனமில்லை. ஒன்று செய்யலாம். உனக்கு ஒரு போட்டி வைக்கிறேன். அதில், நீ வெற்றி பெற்றால் உன் மாமன் மகனை திருமணம் செய்து கொள்ளலாம். தோற்றுவிட்டால், என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அழகிக்கு முடிவு என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்பட்டது. என்றாலும் வேறு வழி இல்லாததால் ஏற்றுக் கொண்டாள்.
அரசர் நகரத்திலிருந்து ஒரு நீதிபதியையும், ஒரு பானையையும் வரவழைத்தார். பானை நிறைய நீர் நிரப்பப்பட்டது. அரசர் சொன்னார், இப்போது நான் இந்தப் பானைக்குள் கருப்பு ஒன்று, வெள்ளை ஒன்று என இரண்டு கூழாங்கற்களைப் போடப் போகிறேன். நீ கண்ணை மூடிக் கொண்டு பானைக்குள் கைவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுக்க வேண்டும். அது வெள்ளையாக இருந்தால், நீ உன் காதலனைத் திருமணம் செய்து கொள்ளலாம். கருப்பாக இருந்தால் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
அந்த பெண் அதற்குச் சம்மதித்தாள். அரசர் இரண்டு கூழாங்கற்களை எடுத்துப் பானைக்குள் போட்டார். இரண்டுமே கருப்புக் கற்களாக இருப்பதை அழகி பார்த்து விட்டாள். ஆனால், தான் அதைக் கவனித்துவிட்டது போல் அவள் காட்டிக் கொள்ளவில்லை. நீதிபதி அவளிடம், கண்ணை மூடிக் கொண்டு பானைக்குள் கை விட்டு ஒரு கூழாங்கல்லை எடு என்றார். பானைக்குள் போட்டிருக்கும் இரண்டுமே கருப்புக் கற்கள். எதை எடுத்தாலும் அரசனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று அவள் கவலையுடன் சற்று நேரம் யோசித்தாள்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் கண்ணை மூடியபடி பானைக்குள் கைவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். எடுத்ததுமே ஏதோ கை தவறி நழுவிவிட்டது போல அந்தக் கல்லைக் கீழே போட்டுவிட்டாள். முன்பே பானையைச் சுற்றி நிறைய கற்கள் இருந்ததால், அவள் தவறவிட்ட கல் எது என்று கண்டுபிடிக்க இயலாதபடி ஆயிற்று. நான் எடுத்தது வெள்ளைக் கூழாங்கல்தான். கைதவறிக் கீழே விழுந்து விட்டது. மன்னிக்க வேண்டும் என்று கூறியபடி கீழே கிடந்த கற்களில் ஒரு வெள்ளைக் கல்லை எடுத்து நீட்டினாள் அந்தப் பெண்.
நீதிபதிக்குச் சந்தேகம் வந்தது. நீ எடுத்தது வெள்ளைக் கல்தான் என்று எப்படி நம்புவது? என்று கேட்டார். நீதிபதி அவர்களே! அப்படி என் மீது உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், பானைக்குள் இருக்கும் இன்னொரு கல்லை எடுத்துப் பார்க்கலாமே என்றாள் அழகி. அதன்படி பானைக்குள் இருந்த கல் எடுக்கப்பட்டது. அது கருப்புக்கல்! அது கருப்புக்கல் என்பதால் பெண் எடுத்தது வெள்ளைக் கல்தான் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அரசர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அரண்மனை திரும்பினர்.
நீதி :
பிரறை ஏமாற்ற நினைக்கக்கூடாது.
Comments
Post a Comment